அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (பார்கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை என்றும், திங்கட்கிழமை முதல் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
தற்போதுள்ள நோய்ப் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும், 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நோய்த்தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், கோவிட் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் சமீபகாலத்தில் கரோனா நோய்த்தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக 28.3.2021 அன்று, 13,070 நபர்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 23.4.2021 அன்று கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 95,048 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், ஏப்ரல் 26 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன :
* அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (பார்கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
* பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் ((Shopping Complex & Malls) இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் இதர அனைத்துக் கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.
தனியாகச் செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் (Departmental stores) குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
* சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Spas, Saloons, Barber shops) இயங்க அனுமதி இல்லை.
* அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் ((Restaurants/ Hotels / Mess and Tea Shops) பார்சல் சேவை (பார்சல் சர்வீஸ்) மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் (Hotels and Lodges) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
*அனைத்து மின் வணிக சேவைகள் ((e-commerce) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.
* கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/ திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்/ இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் ((IT & ITES companies) குறைந்த பட்சம் 50 சதவீதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய (Work from Home) வேண்டும்.
* கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் (sports training academy) செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
* புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
* வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
* ஏற்கெனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
பொது
* தொழில் நிறுவனங்களுக்கான கரோனா பொது முடக்ககால செயல்பாடுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணைகள் எண் 346, நாள் 18.4.2021 மற்றும் எண் 348, நாள் 20.4.2021 ஆகியவற்றின்படி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வித மாறுதலும் இன்றி தொடர்கின்றன.
* பணிக்குச் செல்லும் பணியாளர்கள், பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையைத் தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி, கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக்கொள்கிறது''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.