வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும்: ‘அக்னி நட்சத்திரம்’ இன்று(04-05-2021) தொடக்கம்
வானிலை ஆய்வு மைய தரவுகளில் ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்ற வார்த்தையே இல்லை. ஆனால் முன்னோர்களின் வானியல் கணக்கின்படி அக்னி நட்சத்திர காலம் என்பது ஏற்கனவே கணக்கிடப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியனின் கதிர்கள் நம்மைச் சுட்டுப் பொசுக்குகின்றன. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரை பிற்பகுதி- வைகாசி முதல் 2 வாரங்களில் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.


இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்கி தொடர்ந்து 25 நாட்கள் இருக்கும். அதாவது வருகிற 29-ந்தேதியோடு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது.

வெயிலின் தாக்கம்

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக நோய்ப் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. இதனால் மாநகரப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை பெரிதாக பொதுமக்கள் உணரவில்லை. அதேநேரம், வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால் மின்விசிறிகள், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் ஓய்வின்றி இயங்கின.

நடப்பாண்டு கொரோனா நோய் பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளால் பகலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழையும் பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.

உடலில் நீர்வற்றிப்போகும்

மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 25 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தைத் தவிர்க்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் நடத்தலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுகிறது. திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல் போன்றவற்றில் ஈடுபடுவதில் தவறு இல்லை. விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அதேநேரத்தில் முடி இறக்குதல், காது குத்துதல், புதுவீட்டுக்கு குடிபோவது, பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுவது போன்ற விவசாய வேலைகளைத் தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரபல ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments