தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 112 முஸ்லிம்கள் எம்எல்ஏ.க்களாக தேர்வு






தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 824 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 112 பேர் முஸ்லிம்கள் ஆவர்.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில் 42 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 41 பேர் திரிணமூல் சார்பிலும் முகம்மது நவ்ஷாத் சித்திக்கீ என்பவர் ராஷ்ட்ரிய செக்யூலர் மஜ்லீஸ் கட்சி சார்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இந்த எண்ணிக்கை 2016 தேர்தலில் 59 ஆக இருந்தது. இம்முறை 42 ஆக குறைந்துள்ளது. கடந்த முறை 56 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்த திரிணமூல் இம்முறை 44 முஸ்லிம்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸில் 18, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 8, அகில இந்திய பார்வார்டு பிளாக்கில் ஒருவர் எனமுஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த மூன்று கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனாலும் முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அசாமில் முஸ்லிம்கள் சுமார் 35 சதவீதம் உள்ளனர். எனினும் 126 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு 32 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்குஅதிகபட்சமாக கடந்த 1983 தேர்தலில் 33 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது இங்கு ஆளும் கட்சியில் முதன் முறையாக முஸ்லிம் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்ததேர்தலில் பாஜக 6 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும் அனைவரும் தோல்வி அடைந்துவிட்டனர். கேரளாவில் 140 எம்எல்ஏக்களில் 32 பேர் முஸ்லிம்கள் ஆவர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 15, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9, காங்கிரஸ் 3, சுயேச்சைகள் 3, இந்திய தேசிய லீக் 1, தேசிய மதச்சார்பற்ற மாநாட்டுக் கட்சி 1 என்ற எண்ணிக்கையில் இவர்கள் உள்ளனர். கடந்தமுறை 29 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் வென்ற எம்எல்ஏக்களில் 7 முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், ஆட்சி அமைக்கப் போகும் திமுகவில் 3, மனிதநேய மக்கள் கட்சியில் 2, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் உள்ளனர். மொத்தம் 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரு முஸ்லிம் மட்டுமே திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments