புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வழிமுறைகளை கடைப்பிடிப்பது எப்படி? விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தல் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் கடைப்பிடிக்க வேண்டி நடைமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மளிகை, பலசரக்குகள், காய்கறி கடைகள் ஏ.சி. வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். மளிகை, பலசரக்குகள், காய்கறி கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும், பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

திருமண விழாக்களில் 50 பேர்
மீன், இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையே இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி. பயணி ரெயில், மெட்ரோ ரெயில், அரசு, தனியார் பஸ், வாடகை டாக்சியில் 50 சதவீதம் பேர் பயணிக்க அனுமதி. இறுதி ஊர்வலம், அதை சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்கு பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. முழு ஊரடங்கு நாள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி என கூறினர். 
இதில் இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி, (அன்னவாசல்) மாதேஸ்வரன், இலுப்பூர் உதவி ஆய்வாளர் ரெக்ஸ் ஸ்டாலின், (அன்னவாசல்) குணாசேகரன் உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை, அனைத்து வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், ஆய்வாளர்களுக்கான கொரோனா ஊரடங்கு குறித்த கூட்டம் நடந்தது.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தாசில்தார் ஜபருல்லா மற்றும் போலீசார், சுகாதார துறையினர், ஆவுடையார் கோவில் அனைத்து வர்த்தக சங்கம், ஆவுடையார்கோவில் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரிடத்திலும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கில் அரசின் வழிகாட்டு முறைகளை பற்றிய விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. 

காரையூர்

காரையூர் அரசமலையில் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடை உரிமையாளர்கள், கோவில் நிர்வாகிகள், தேவாலய நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசின் உத்தரவை கடைப்பிடிக்க கோரி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் பாண்டி, மரியசெல்வம், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், காரையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னையா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
விராலிமலை 
விராலிமலை தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார் தலைமை தாங்கினார். இதில் கொடும்பாளுர் வட்டார மருத்துவ அலுவலர் லோகேஸ்வரன், விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து வியாபர சங்க நிர்வாகிகளிடமும் தற்போதைய அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா குறித்த விழிப்புணர்வு வழிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் எனவும் மேலும் கடைக்கு வரும் பொதுமக்களிடம் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பேசினர். கூட்டத்தில் விராலிமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, விராலிமலை, மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி, அன்பழகன், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை 

கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அரசு அறிவித்து உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், 12 மணி முதல் 3 மணி வரை, 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று பிரிவாக பிரித்து பார்சல் சேவை மட்டும் நடத்திக் கொள்ளலாம் எனவும் காவல் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. 
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டாட்சியர் புவியரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அரசமணி, நலதேவன் மருத்துவ அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரை ஆற்றினார்கள்.

பொன்னமராவதி

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள், வர்த்தகர் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து மத வழிபாட்டு தல நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள உத்தரவுகளை பொன்னமராவதி தாலுகாவில் முழுமையாக அனைவரும் பின்பற்றி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வட்டாட்சியர் ஜெயபாரதி கேட்டுக்கொண்டார்.

ஆலங்குடி

ஆலங்குடியில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி தலைமை தாங்கி வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். 
தாசில்தார் கருப்பையா முன்னிலை வகித்தார். இதில் உதவி சப்-கலெக்டர் ஹஸரத் பேகம் மற்றும் அதிகாரிகள், போலீசார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments