உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் மனுதாரரின் வீட்டிற்கு சென்று கல்வி உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர்!உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற புதிய துறையில் பெறப்பட்ட மனுவில் மனுதாரரின் வீட்டிற்கு சென்று கல்வி உதவித்தொகை ஆணையை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார்.

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் `உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற துறையை உருவாக்கி, அதற்கென தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் நியமித்தார். மாவட்டந்தோறும் அவர் பெற்ற மனுக்களில் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் அருகே லட்சுமணப்பட்டியில் குறளரசன் என்பவர் பட்டப்படிப்பு பயில்வதற்கு உதவித் தொகை வேண்டி ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளார். 

இவரது மனுவினை வருவாய்த்துறையினர் மூலம் உடனடியாக பரிசீலனை செய்து கல்வி உதவித்தொகை பெற இவர் தகுதியுடையவர் என கண்டறியப்பட்டது. தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை மனுதாரரின் வீட்டிற்கு நேற்று கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று வழங்கினார். 

அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் இதற்கென புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

தளர்வில்லாத ஊரடங்கு அமலில் உள்ளதால் லெட்சுமணப்பட்டியை சேர்ந்த மனுதாரர் குறளரசனுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இம்மாணவருக்கு தேவையான கல்லூரி கட்டணத்தை வழங்குவதற்கு வங்கிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது தளர்வில்லா ஊரடங்கு காலக்கட்டம் என்பதால் வருவாய்த்துறையினர் மூலம் மனுதாரர்களின் வீடுகளுக்கே சென்று தகுதியான மனுக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வழங்கிய ஏனைய மனுக்களின் மீதும் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments