முதல்வர் காப்பீடு திட்டத்தில் தனியாரில் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வழங்கப்படும்: முழு கட்டணத்தையும் அரசு ஏற்காது என அதிகாரிகள் தகவல்


முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்றால், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் மட்டுமே வழங்கப்படும். முழுகட்டணத்தையும் அரசு ஏற்காது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்த நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் குறைவான பாதிப்பு உள்ளவர்களுக்கு தினமும் அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் அட்டை வைத்துள்ளவர்கள் கட்டணமின்றி கரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று அரசு அறிவித்தது.

ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்ததை மீறி கரோனா சிகிச்சைக்கு ஒருநாளுக்கு ரூ.30 ஆயிரம்முதல் ரூ.70 ஆயிரம் வரை வசூலித்தன. பல மருத்துவமனைகள் தற்போதும் அதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வராக கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்ற ஸ்டாலின், அன்றைய தினமே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் கட்டணத்தை காப்பீடு திட்டம் மூலம் அரசு ஏற்கும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு காப்பீடு அட்டைவைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா, காப்பீடு அட்டை இல்லாதவர்களும் சிகிச்சை பெறலாமா, சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் அரசு ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டஅட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறுவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்ட அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர் ரூ.5 லட்சம் வரை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒருவருக்கு ஒருநாளைக்கு அதிகபட்சமாக சிகிச்சைக்கு (ஐசியு) அரசு நிர்ணயித்த ரூ.15 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். சில மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளது. அந்த கூடுதல் கட்டணங்கள் காப்பீடு மூலம் வழங்கப்படாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகவசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு கரோனாசிகிச்சைக்கு 796 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 293 தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன” என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments