கடற்கரை கிராமங்களில் பாசி வளர்ப்பு தொழில் பாதிப்பு






கடற்கரை கிராமங்களில்  பாசி வளர்ப்பு தொழில் பாதிப்பு
    
அடிக்கடி கடல் உள்வாங்கி வருவதால் கடற்கரை கிராமங்களில் பாசி வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் உள்ளது. அதுமட்டுமின்றி மீனவர்கள் கடற்கரையில் பாசிவளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் பகுதியில் குறிப்பிட்ட தொலைவிற்கு கயிறு கட்டி, அதற்கு உட்பட்ட பகுதியில்  பாசி வளர்ப்பு தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாசிகள் 90 நாட்கள் வளர்க்கப்பட்டு பிறகு அறுவடை செய்து இதனை கர்நாடகா, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தப்பாசி உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அடிக்கடி உள்வாங்கும் கடல்
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடல் அடிக்கடி உள்வாங்குவதும், அதன்பின் சில மணிநேரத்திற்கு பிறகோ அல்லது ஒருநாளுக்கு பிறகோ சகஜநிலைக்கு வருகிறது. இதனால் பாசி காய்ந்து, அதன்பின் கடல் சகஜநிலைக்கு வந்தபிறகு பாசி அழுகி விடுகிறது.
இதனால் பாசி வளர்ப்பில் ஈடுபடும் மீனவர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஏற்கனவே மீன்பிடி தடைகாலத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் பாசி வளர்ப்பு தொழிலும் பாதிக்கப்பட்டதால் என்னசெய்வது என்றே தெரியாமல் உள்ளனர். எனவே பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments