புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பயணிக்க அமலுக்கு வந்த `இ-பதிவு' முறை: போலீசார் தீவிர வாகன சோதனை!



உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்ல `இ-பதிவு' முறை அமலுக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்திற்குள்ளேயும், வெளி மாவட்டங்களுக்கும் கார்களில் பயணிக்க `இ-பதிவு' முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி`இ-பதிவு' முறையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசியமான தேவைக்கு மட்டும் விண்ணப்பித்து பயணிக்க முடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் `இ-பதிவு' முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதுதவிர ஆங்காங்கே சாலையில் முக்கிய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் திருக்கோகர்ணம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார்களில் வந்தவர்களிடம் `இ-பதிவு' விண்ணப்பித்ததற்கான சான்றினை சரிபார்த்தனர். இதில் அவர்களது செல்போனில் இருந்த குறுந்தகவலை சரிபார்த்து அனுப்பினர்.

ஒரு சிலர் தங்களது கார்களின் முன்பக்க கண்ணாடியில் `இ-பதிவு' விண்ணப்பத்தினை நகல் எடுத்து ஒட்டியிருந்தனர். சிலர் அதனை கையிலும் நகல் எடுத்து வைத்திருந்தனர். அதனை போலீசார் பார்த்து வாகனங்களை அனுமதித்தனர். இ-பாஸ் பெறுவதில் இருந்த சிரமம் `இ-பதிவு' முறையில் இல்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக `இ-பதிவு' செய்து பயணித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments