புதுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்


திருச்சி - புதுக்கோட்டை -  காரைக்குடி இடையேயான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே துறை

மத்திய அரசின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறை அதிகளவில் வருவாயை ஈட்டி வருகிறது. சாமானியர்கள் முதல் அனைத்து  தரப்பினரும் ரயில்களில் பயணம் செய்ய அதிகப்படியாக விரும்புவதால் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இந்த ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு யுக்திகளையும் மத்திய அரசு கையாண்டு வருகிறது.

மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்

சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தெற்கு ரயில்வே அனைத்து ரயில் வழித்தடங்களையும் மின்மயமாக்கல் மற்றும் இரட்டை பாதைகளாக மாற்றும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமேஸ்வரம் வரை அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த பாதையை மின் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்

திருச்சி முதல் புதுக்கோட்டை வரையிலான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையிலான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் இந்தப் பாதையில் மின்சார ரயில் ஓடத் தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - மதுரை வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. திருச்சி, மானாமதுரை, விருதுநகர், ராமேஸ்வரம் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்தால், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments