மணமேல்குடி அருகே விபத்து 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சிறுவன் பலி
மணமேல்குடி அருகே விபத்து 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சிறுவன் பலி 4 பேர் படுகாயம்

மணமேல்குடி அருகே விசேஷத்திற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டி ருந்தவர்கள் வந்த வாகனத்தின் மீது லாரி மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அறந்தாங்கியை அடுத்த கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வர்ஷா என்ற கார்த்திகேயன் (12). இவர் ஜூன் 16 புதன்கிழமை அன்று தனது உறவினர் திருமணத்திற்காக
கண்டிச்சங்காட்டில் இருந்து உறவினர்களுடன், சரக்கு வாகனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடம்பாக்குடி சென்றுள்ளார். திருமணம் முடிந்து கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் சரக்கு வாகனத்தில் கண்டிச்சங்காட்டிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பி கொண்டிருந்தனர். கார்த்திகேயன் சரக்கு வாகனத்தின் கதவு அருகே அமர்ந் திருந்தார். மணமேல்குடி அருகே உள்ள தூங்காலைமேடு என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது. சரக்கு வாகனத்திற்கு முன்னால் சென்ற, பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர் திடீரென்று குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டுள்ளார். அதே நேரத்தில் டேங்கர்லாரியின் பின்னால் சென்ற சரக்கு வாகனத்தின் ஓட்டுனரும் பிரேக் போட்டுள்ளார்.

சரக்கு வாகனத்தின் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதை கவனிக்காமல்,அந்த வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி திடீரென்று எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்தவர்களின் சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் அந்த வாகனத்தின் கதவு அருகே அமர்ந்திருந்த கார்த்திகேயன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் சரக்கு வாகனத்தின் டிரைவர் நீர்விளங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் அன்பரசன், வெளிவயல் ஆறுமுகம். செய்யானம் கிருஷ்ணன். சுசீலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
 
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 மேலும் காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இச்சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments