கோட்டைப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரம்அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
கோட்டைப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

கடலுக்கு சென்ற மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வடக்கு புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினமணி(வயது 46). இவர், தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் தனது மகன் வசீகரன்(19) மற்றும் மற்றொரு மீனவர் மணிகண்டன்(23) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். பின்னர், மீன்பிடித்து விட்டு 3 பேரும் கரை திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வசீகரன் கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். அவரை, தந்தை தினமணி மற்றும் மணிகண்டன் ஆகியோர் நீண்ட நேரம் கடல் பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
கடலோர காவல் படையினர்

ஏமாற்றத்துடன் கரை திரும்பிய அவர்கள் இதுகுறித்து மீமிசல் கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்குள் சென்று வசீகரனை தேடினர். அவர்களாலும் மீனவர் வசீகரனை கண்டுபிடித்து மீட்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், வடக்கு புதுக்குடி நாட்டுப்படகு மீனவர்கள், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் உள்ளிட்டோர் தவறி விழுந்த வசீகரனை தேடி கடலுக்குள் சென்றனர். தமிழக அரசு உத்தரவின்பேரில், வடக்கு புதுக்குடியில் வருவாய்த்துறை, மீன்வளத் துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் முகாமிட்டு மீனவரை தேடும் பணியை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆறுதல்

இந்தநிலையில், மாயமான மீனவர் வசீகரன் குடும்பத்தினரை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று சந்தித்து ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி, வசீகரனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், 

கடலுக்குச் சென்று மீன் பிடித்து திரும்பும் போது தவறி விழுந்து மாயமான மீனவர் வசீகரன் பாதுகாப்பாக உயிர் திரும்புவார் என நம்புகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர் மூலம் தேடவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

அப்போது மணமேல்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்தி ராமசாமி, அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் மீனவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments