தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் இனிப்பு கார வகை கடைகள் ,இ சேவை மையங்கள் திறக்க அனுமதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு           
தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம். தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம். தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 

* நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி

* அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி

* பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்) - இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி

* கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி (கட்டுமான பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது)

* பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அலுவலகங்கள் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments