எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 15ரூ கட்டணம், காசோலைக்கு கட்டணம்.. ஜூலை 1 முதல் அமல் !


ஜூலை 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்குகள் (பி.எஸ்.பி.டி) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் ஏடிஎம் அல்லது வங்கிக் கிளையில் இருந்து பணம் எடுத்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச பண இருப்பு தேவைப்படாத , சாதாரண பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி சேமிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (பி.எஸ்.பி.டி) என்பது அனைவருக்கும் கிடைக்க கூடிய ஒரு சாதாரண வங்கி சேவை. இந்தியாவில் அதிக BSBD வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கி அவ்வகை வங்கி கணக்குகளுக்கு புதிய சேவை கட்டணங்களை ஜூலை 1 முதல் நடைமுறைப் படுத்தவுள்ளது.

அதன்படி, கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் நான்கு முறை (வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் சேர்த்து) இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 15 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

ஒரு நிதியாண்டில் 10 காசோலை தாள்கள் பி.எஸ்.பி.டி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக எஸ்.பி.ஐ வழங்கும். அதன் பிறகு, 10 காசோலை தாள் புத்தகத்திற்கு – ரூ.40 + ஜிஎஸ்டி , 25 காசோலை தாள் புத்தகத்திற்கு ரூ.75 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

அவசரகால காசோலை புத்தகத்திற்கு, 10 தாள்களுக்கு ரூ.50 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு எந்த விதமான காசோலை வசூலிப்பும் இல்லை.

நிதி அல்லாத பரிவர்த்தனைகள் (non-financial) மற்றும் பரிமாற்ற பரிவர்த்தனைகள் இலவசமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் எளிய மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தும் இது போன்ற அடிப்படை சேமிப்பு கணக்கு சேவைகளுக்கு தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 12 கோடி பி.எஸ்.பி.டி வாடிக்கையாளர்களிடம் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் எஸ்பிஐ வங்கி 2015-2020 காலக்கட்டத்தில் சேவை கட்டணம் எனும் பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என ஐஐடி பம்பாய் பேராசிரியர் ஆஷிஷ் தாஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 மட்டும் ரூ.72 கோடி , 2019-20 காலகட்டத்தில் ரூ .158 கோடி சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா ஒரு பக்கம் டிஜிட்டல் வழி பணப்பரிவர்தனைகளை ஊக்குவிக்க, மறுபுறம் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எஸ்பிஐ வங்கி NEFT, IMPS, UPI, BHIM-UPI போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அதிகப்பட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு 17.70 ரூபாய் வரை வசூலிக்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments