அஸ்ட்ரா செனெகா, பைசர் தடுப்பூசிகளை கலந்து போடுவதால் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி: இங்கிலாந்து ஆய்வு முடிவு!அஸ்ட்ரா ஜெனேகா, பைசர் நிறுவன தடுப்பூசிகளை கலந்து போடுவதால் வலுவான நோய் எதிர்ப்புச்சக்தி கிடைப்பது இங்கிலாந்தில் நடந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை முதல் டோசாகவும், அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை 2-வது டோசாகவும் போட்டுக்கொண்டார். இவரைப்போன்று இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியையும், 2-வது டோசாக அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இத்தாலி பிரதமரைப்போன்று முதலில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியையும், அடுத்து பைசர் தடுப்பூசியையும் போடுகிறபோது, அது வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தருகிறது என இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவு கூறுகிறது.

இந்த ஆய்வில் இவ்விரு தடுப்பூசி டோஸ்களையும் 4 வார இடைளெியில் போட்டுக்கொண்ட பின்னர் கொரோனாவின் ஸ்பைக் புரதத்துக்கு எதிராக அதிகளவில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) உருவானது தெரிய வந்துள்ளது.
இதற்காக 830 பங்கேற்பாளர்கள் பதிவு செய்யப்பட்டனர். 4 வார இடைவெளிக்கு பின்னர் 463 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

இதுபற்றி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மற்றும் தடுப்பூசி துறை பேராசிரியர் மேத்யூ ஸ்னேப் கூறும்போது, “இந்த ஆய்வு முடிவு, 4 வார இடைவெளியில் இரு வேறு தடுப்பூசிகள் போடுகிறபோது அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதை காட்டுகிறது” என்றார்.

முதலில் அஸ்ட்ரா ஜெனேகாவையும், அடுத்து பைசர் தடுப்பூசியையும் போடுகிறபோது, அதிகளவில் நோய் எதிர்ப்புச்சக்தியையும், டி செல்களையும் உருவாக்குகிறது என இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

இதில் முக்கிய அம்சம், பைசர் தடுப்பூசியை முதலிலும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை இரண்டாவதாக போடுவதையும் விட மேற்குறிப்பிட்டபடி அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை முதல் டோசாகவும், பைசரை இரண்டாவதாகவும் போடுவதுதான் அதிக பலன் அளிக்கிறதாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments