கோட்டைப்பட்டினம் அருகே படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 5 பேர் மீட்பு!படகு என்ஜினில் ஏற்பட்ட பழுதால் கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிராமத்திலிருந்து நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த கருணானந்தம்(வயது 29), ராஜதுரை(25), பாண்டி(37), நாகூர் கனி(30), தூண்டிமுத்து(38) ஆகிய 5 மீனவர்கள் நாட்டுப் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் வழக்கமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் கடலில் மீன் பிடிப்பது வழக்கம். அவ்வாறு மீன்பிடித்த அவர்கள் நேற்று மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது கோட்டைப்பட்டினம் அருகே என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. நீண்டநேரம் போராடியும் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால், 5 மீனவர்களும் படகில் நடுக்கடலில் தத்தளித்தனர்.

பின்னர், அங்கிருந்தவாறு கடலோர காவல் குழும கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1093-ஐ தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தனர். 

அதன்பேரில், மணமேல்குடி கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து படகில் சென்று நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும், அவர்களது படகையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.

இதுகுறித்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் கூறுகையில், இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஆகையால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது படகில் டீசல் போதுமான அளவு உள்ளதா?, என்ஜின் சரியாக உள்ளதா? என்று சரிபார்த்து செல்ல வேண்டும். 

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு கவசங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments