தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கல்வி கட்டண தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை


தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கல்வி கட்டண தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை

நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாக தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா சூழலால் பெற்றோர் பலர் வேலையிழப்பு, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இருப்பினும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் பல பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இருப்பினும், சிலர் கல்வி கட்டணத்துக்கு கூட வழியில்லாமல், தனியார் பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அப்படி சேர்ப்பதற்கு கூட, கடந்த கல்வியாண்டு கட்டணத்தை முழுமையாக செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் வழங்க முடியும் என்று சில தனியார் பள்ளிகள் கூறி அலைக்கழிப்பதாக புகார்களும் வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.ஜி.சி.எஸ்.இ., ஐ.பி. போன்ற பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

75 சதவீதம் கல்வி கட்டண தொகை

* தொடர் அங்கீகாரம் புதுப்பிக்காத அனைத்துவகை தனியார் சுயநிதி பள்ளிகள் உடனடியாக தங்கள் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்க உரியமுறையில், முழுமையான வடிவில் கருத்துரு தயார்செய்து சார்ந்த அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே பெறப்பட்ட சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், 2021-22-ம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள படிப்பு கட்டணத் தொகையில் 75 சதவீதம் தொகையை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். சீருடை, பஸ் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது.

* 2021-22-ம் கல்வியாண்டிற்கான கட்டண நிர்ணயக்குழுவின் ஆணையின் நகல் மற்றும் 75 சதவீதம் படிப்பு கட்டணத் தொகை விவரத்தை அவரவர் பள்ளியின் தகவல் பலகையில் பெற்றோர் அறிந்துகொள்ளும் விதமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுச்சான்றிதழ்

* பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும்.

* மாணவர்களால் மாற்றுச்சான்றிதழ் கோரும்பட்சத்தில் காலதாமதமின்றி மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படவேண்டும். கொரோனா சூழலையும், பெற்றோரின் சூழலையும் கருத்தில்கொண்டு சமூகநீதியுடன் மேற்காண் பணியை மேற்கொள்ளவேண்டும்.

* 2021-22-ம் கல்வியாண்டுக்கான கட்டண நிர்ணயக்குழு ஆணை பெறப்படாத பள்ளிகள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியே தனியார் பள்ளிகள் கட்டன நிர்ணயக்குழு அலுவலருக்கு விண்ணப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து வகுப்புகளுக்கும் நடைபெறும் ஆன்லைன் கற்பித்தல் செயல்பாடுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள காலஅளவுக்கு மிகாமல் மேற்கொள்வதை கண்காணித்து உறுதிப்படுத்தல் வேண்டும்.

மாணவர்களை நீக்கக்கூடாது

* ஆன்லைன் வகுப்புகள் செயல்பாடுகளை அரசின் கல்வித்துறையால் கடந்த 17-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்துள்ளவாறு பள்ளியின் முதல்வர் கண்காணித்து எவ்வித புகார்களுக்கும் இடமின்றி அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும்.

* எந்த காரணத்துக்காகவும் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை நீக்கவோ, கற்பித்தல் செயல்பாடுகளில் பங்கேற்பதை தடுக்கவோ கூடாது.

* இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்தும், மாணவர்களிடம் இருந்தும் நாள்தோறும், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்கள் வராதபடி பள்ளிகள் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments