தேவையில்லாத இடங்களில் `பிளீச்சிங் பவுடர்' அதிகமாக தெளிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது-அமைச்சர் மெய்யநாதன் பேட்டி!



தேவையில்லாத இடங்களில் `பிளீச்சிங் பவுடர்' தெளிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கருவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். அதன்பின் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், `தமிழகத்தில் சிறைகளில் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணியும் நடைபெறுகிறது. சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் அளித்த பின் 2-வது டோஸ் அளிக்கப்படும்' என்றார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், `உலக சுகாதார அமைப்பும், சுகாதாரத்துறையினரும் `பிளீச்சிங் பவுடர்' தெளிப்பது குறித்து விளக்கமாக கூறியுள்ளனர். `பிளீச்சிங் பவுடர்' அரசு மருத்துவமனை உள்பட துர்நாற்றம் வீசுகிற இடங்களில் மட்டும் தெளிக்க வேண்டும். தேவை இல்லாத இடங்களில், கிராமப்பகுதிகளில், மற்ற இடங்களில் மூட்டை, மூட்டையாக பிளீச்சிங் பவுடர் தெளிப்பதால் ஒரு பயனும் இல்லை. இதில் கொரோனாவை அழிக்க வாய்ப்பே இல்லை. அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு சுவாச திறன் குறைகிறது. ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டால் கடைமடைக்கு சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, விராலிமலையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து, அவர் கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்று வாலிபர் ஒருவர் புகார் கூறினார். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments