புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுங்காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி!



புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அளவு குறைந்து போனதால் குறுங்காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடுவதற்கு 500 மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழை அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனை தவிர்க்க குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் பல்லுயிர் காடுகள் உருவாகும். மக்களுக்கு தேவையான சுத்தமான காற்று கிடைக்கும். தற்போது காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து காற்று மாசுபாடு அடைந்துள்ளது. மரங்கள் அதிகம் வளர்ப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை மரங்கள் எடுத்துக் கொண்டு சுத்தமான காற்றை வெளியிடும்.

ஆகவே, மாவட்டத்தில் குறுங்காடுகள் வளர்க்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான பணியை மேற்கொள்ள பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் வழியாகவும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு வருடத்திற்கு பிறகு குறுங்காடுகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என கண்காணிக்கப்படும்.

தமிழகத்தில் நாட்டு மரங்கள் வளர்க்க முன்னுரிமை வழங்கப்படும். கருவை, தைல மரங்கள் போன்ற வெளிநாட்டு மரங்கள் வளர்ப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நைனா முகமது, ராமகிருஷ்ணன், பாலு, சந்திரசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

வடகாடு அருகேயுள்ள மேலாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சூரன்விடுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். அப்போது அரசு அதிகாரிகள், அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments