ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!



பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலைய உயர்வை கண்டித்து  SDPI சார்பாக புதுக்கோட்டை கிழக்கு முழுவதும்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் Dr.ஹனிபா பேசியதாவது; 
இந்திய மக்கள் கொரோனா பெருந்தொற்றுடன் போராடி வரும் வேளையில், தற்போது விலைவாசி உயர்வுடனும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலையிலும், விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை, கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினசரி நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது முதற்கொண்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் மத்திய அரசு அதிகரித்து வருகின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டவண்ணம் உள்ள பெட்ரோல் விலை வெகுவிரைவில் தமிழகத்தில் ரூ.100 ஐ தொடவுள்ளது. மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.100 ஐ தாண்டிவிட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மே 4ஆம் தேதி முதல் சுமார் 21 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இத்தகையதொரு நெருக்கடியான கட்டத்தில் வாழ்வாதாரத்திற்கும் பெருந்தொற்று நோயிலிருந்து தப்பிக்கவும் போராடும் நாட்டின் குடிமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும் காரணமாகும் பெட்ரோலிய எரிபொருட்களின் விலை உயர்த்துவதன் மூலம் நாட்டு மக்களின் அன்றாட பட்ஜெட்டில் அதிக சுமையை சுமத்த மத்திய பாஜக அரசு அயராது உழைத்து வருகிறது.

விலை உயர்வுக்கான பழியை எண்ணெய் நிறுவனங்கள் மீது சாட்டிவிட்டு, அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறது. ஆனால் அதுமட்டுமே உண்மையல்ல. விலை உயர்வுக்கு அதிகமான கலால் வரி விதிப்பும் முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் மீது மிக அதிகமாக வரிகள் போடும் நாடு இந்தியா மட்டும்தான். பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் மத்திய, மாநில அரசுகளின் வரிகள்தான். இந்தக் கொடுமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் முடியும் வரை எரிபொருள் விலை உயரவில்லை. இது விலை உயர்வில் தங்களுக்கு பங்கில்லை என்ற மத்திய பாஜக அரசின் கூற்றை பொய்யாக்குகிறது.

எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு எகிறிய அத்தியாசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைந்தபாடில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தால், விலைவாசியும் குறையும் வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் நலனுக்காக விலையை குறைக்காமல், மக்களுக்கு சேர வேண்டிய பயனை அபகரித்து அதிகப்படியான எண்ணெய் நிறுவனங்களை கைவசம் வைத்திருக்கும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

ஆகவே, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமான பெட்ரோலிய எரிபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை கிழக்கு  மாவட்டம் சார்பாக பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கட்சியின் அனைத்துமட்ட கிளைகளிலும் அவரவர் இடங்களில் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments