எஸ்.பி.பட்டினம் இளைஞர் படுகொலை! நீதி கேட்டு தமிழக முதல்வருக்கு NTF பொதுச்செயலாளர் கடிதம்!!




எஸ்.பி.பட்டினம் இளைஞர் படுகொலை!
நீதி கேட்டு தமிழக முதல்வருக்கு NTF பொதுச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

 இது குறித்த அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

பொருள் : எஸ். பி. பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி வழங்க கோரி.

பெருமதிப்பிற்குரிய ஐயா!

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமதானமும் உண்டாகட்டுமாக !

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் என்ற ஊரில் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம், செய்யது முஹம்மது என்னும் 24 வயது அப்பாவி வாலிபர், அவ்வூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த இராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் காவல்துறை உதவி ஆய்வாளர் என்ற முகமூடியுடன் கொலைவெறியாட்டம் ஆடிய காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அதை செய்யது முஹம்மது குடும்பத்தார்க்கு வழங்குமாறும் உத்தரவிட்டது.

மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட காளிதாஸ், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிட்டு மூன்று மாதத்தில் பிணையில் விடுதலையாகி சர்வ சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட செய்யது முஹம்மது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவரது தாயார் ஒரு மாற்றுத்திறனாளி. 

சம்பவம் நடந்தபோது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கருணை அடிப்படையில், செய்யது முஹம்மதின் தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாகவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

அ.தி.மு.க. அரசின் முதல்வராக இருந்து அறிவித்த ஓ.பி.எஸ். அவர்களின் கண்துடைப்பு அறிவிப்புகள் ஏழு வருடங்களாகியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

காவல் துறையின் துப்பாக்கிக் குண்டுக்கு அநியாயமாக பலியான செய்யது முஹம்மதின் மாற்றுத்திறனாளியான அவரது தாயார்,  முறையான வீட்டு மனை பட்டாவுக்கு ஏழு வருடங்களாக அலைகிறார்.

வாக்களித்தபடி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை.

இந்தக் கொலை வழக்கு ஏழு வருடங்களாக தூங்கிக்கொண்டுள்ளது. செய்யது முஹம்மது கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

இழப்பீட்டுத்தொகையாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது தாயாருக்கு ஐந்து லட்ச ரூபாய் மட்டுமே அன்றைய அரசின் சார்பாக வழங்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகை போதுமானதாக இல்லை. மேலும் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே சமுதாய அமைப்புகளால் முன் வைக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால், ஒரு அப்பாவியின் உயிரைக் குடித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கொலைவெறியாட்டம் ஆடிய காவல்துறையின் புல்லுருவி காளிதாஸ் உரிய தண்டனை பெற்றால்தான் நீதியை நிலைநாட்ட முடியும்.

சென்ற ஆட்சியின்போது நடந்த அநியாயங்களுக்கு நீதி வழங்கும் வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தோண்டி எடுத்து நீதியை நிலைநாட்ட முயன்று வரும் சமூகநீதிக்கான தங்கள் தலைமையிலான அரசு, இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் செய்யது முஹம்மது கொலைக்கு நீதி கிடைக்கவும்,

சென்ற அ.தி.மு.க. அரசின் முதல்வரால் வாக்களிக்கப்பட்ட வீட்டுமனை பட்டா முறையாக உடனே கிடைக்கவும்,

அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்திடவும்,

கூடுதல் இழப்பீட்டுத் தொகையாக பத்து லட்ச ரூபாய் வழங்கிடவும்,

உடனடியாக கருணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு .தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
 
ஏ.எஸ். அலாவுதீன்
பொதுச்செயலாளர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments