இன்று வெளியாகிறது +2 மதிப்பெண்கள்




தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாக உள்ளன.

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் இன்று காலை வெளியாகிறது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தமிழகத்தில், 2020-2021ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் படித்த மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் அடையத் தொடங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மே 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நேரடி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டு குழுவையும் நியமித்தார். அந்த குழு தனது பரிந்துரையை கடந்த 25ம் தேதி முதல்வரிடம் அளித்தது. அதை ஆய்வு செய்த பிறகு மதிப்பெண்கள் வழங்கும் முறைகளை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு கடந்த வாரம் மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் முடிந்து தயார் நிலையில்  வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் விவரம் ஆகியவற்றை தேர்வுத்துறை வெளியிட உள்ளது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் தேர்வுத்துறை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று காலை 11 மணி அளவில் முடிவுகளை வெளியிடுகிறார். பள்ளி மாணவர்கள் தங்கள் பதிவு எண்,பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து இணைய தளம் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in  என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப் படிவத்தில் தெரிவித்துள்ள செல்போன் எண்ணுக்கும் உடனடியாக ரிசல்ட் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றுகளை, 22ம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணைய தளங்களில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து தங்களின் மதிப்பெண் பட்டியல்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உயர்கல்வி படிக்க வசதியாக தசம முறையில் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம், பிளஸ் 1 வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வில் இருந்து 20 சதவீதம், பிளஸ் 2 அகமதிப்பீட்டில் 30 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஒரு பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் 88.5 என்று வந்தால் அதை 89 ஆக மாற்றி முழு மதிப்பெண் வழங்கும் முறை முன்பு  இருந்தது. ஆனால்  இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் தசம முறையில் இருக்கும். அதாவது, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏற்ப கட்-ஆப் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின்  மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அப்படியே தசம எண்ணில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை tnresultsdge1, DGE2, DGE ஆகிய இணைய தளங்களில் காணலாம் என்றும் மாணவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் கூறிய செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments