முக்கண்ணாமலைப்பட்டி கல்குவாரியில் வெடி விபத்தில் சிறுவன் பலி; 10 பேர் படுகாயம்

    
முக்கண்ணாமலைப்பட்டி கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். 10 பேர் படுகாயமடைந்தனர்.
  
புதுக்கோட்டை மாவட்டம், கிளிக்குடி அருகே சீத்தப்பட்டியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான கல் குவாரி முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டியில் உள்ளது. இந்த கல் குவாரியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கல்குவாரியில் வெடி பொருட்கள் வைக்கும் குடோன் அருகே தொழிலாளர்கள் ஒதுங்கி நின்றனர்.

அப்போது, வெடிபொருட்கள் வைக்கும் குடோனில் மின்னல் தாக்கியதில், அங்கு இருந்த வெடிகள் மற்றும் வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. மழைக்கு ஒதுங்கி நின்ற தொழிலாளர்களும் தூக்கி எறியப்பட்டனர். மேலும் தொழிலாளர்களின் அலறல் சத்தமும் கேட்டது. இதில் அங்கிருந்த கொட்டகை, மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. 

சிறுவன் பலி-10 பேர் படுகாயம்

இதில் பலத்த காயமடைந்த இலுப்பூர் வட்டம், வீரப்பட்டி அருகே தெற்கு களத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் (வயது 17) சம்பவ இ்டத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும். குடுமியான்மலை அருகே உள்ள சேரனூரை சேர்ந்த கருப்பையா (45), ஆண்டிச்சாமி(51), எம்.செல்வராஜ்(50), பி.சுரேஷ்(32), சி.காந்தி (36) உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.  இதைப்பார்த்த அப்பகுதியினர் அங்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் அன்னவாசல் போலீசார் இந்த வெடி விபத்தில் வேறு யாரேனும் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தாசில்தார் பழனிசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்குவாரி வெடி விபத்தில் இறந்த  சிறுவன் மற்றும் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments