தொண்டி அருகே உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு






ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உப்பூரில் 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன், இரு அனல் மின் நிலையங்கள் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒப்புதல் வழங்கிப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பகுதி மக்கள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுவில், அனல் மின் நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட, ஆயிரத்து 342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் எனவும், எந்தப் பொது விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்பாயம் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, அதை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
 
இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தமிழக அரசு வாதிட்டது. இதுகுறித்து மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments