தமிழகத்தில் 3-வது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்






    
தமிழகத்தில் 3-வது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளை கண்டறிந்து உரிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையோடு முடிவடையும் நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் கொரோனா நோய்த்தடுப்பு தொடர்பாக சில அறிவுறுத்தல்களையும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி “கொரோனா 3-வது அலை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க அவசியமின்றி மக்கள் வெளியே வரவேண்டாம்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி போடும் பணிகள் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதிக அளவில் கூட்டம் கூடும் பகுதி அடையாளம் காணப்பட்டால், அந்த பகுதியை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments