கோபாலப்பட்டிணத்தில் சிறுவன் உள்பட 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்! நடவடிக்கை எடுக்க தவறிய நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர்!!






கோபாலப்பட்டிணத்தில் சிறுவன் உள்பட 4 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. நாய் கடிக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாய்களின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோபாலப்பட்டிணத்தில் நாய்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் பொதுமக்கள் படும் தொல்லை குறைந்தபாடில்லை.சாலைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்னும் நாய்கள் சாலைகளில் தாறுமாறாக சுற்றித்திரிகின்றன. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சமீப காலமாக அதிகளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. சில நேரங்களில் தெருவில் செல்வோரை கடிப்பதும், விரட்டுவதும் வாடிக்கையாகி இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுகுளம் பள்ளிவாசல் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த கோபாலப்பட்டிணம் 7-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவரை நாய் கடித்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று 25.07.2021 அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென்று ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களையும், நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த வெறிநாயிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த வெறிநாய் குடியிருப்பு பகுதிக்குள் சென்று விளையாடி கொண்டிருந்த சிறுவன் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மற்றும் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் உள்பட 4 பேரை தொடர்ச்சியாக கடித்து குதறியது. பின்னர் அந்த வெறிநாய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

வெறிநாய் கடியில் காயம் அடைந்தவர்கள் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போட்டு, தடுப்பூசி செலுத்தி கொண்டு சிகிச்சைக்கு பின்பு வீடுகளுக்கு சென்றனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொந்தரவு அதிகளவில் இருந்து வந்தது. இவற்றை கட்டுப்படுத்தக் கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வெறிநாய் ஒன்று 4 பேரை கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தில் பொதுமக்கள் வெறிநாய் கடிக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை பிடித்து சென்று இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. மேலும் கோபாலப்பட்டிணம் மற்ற பகுதிகளிலும் இதே போன்று வெறி நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியும் வருகின்றது. எனவே ஊரே நாய் மயமாகும் முன்பு அவற்றை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோபாலப்பட்டிணத்தில் ஒரே நாளில் 4 பேரை வெறிநாய் கடித்து குதறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 6.07.2021 அன்று கோபாலப்பட்டிணத்தில் வெறி நாய்களின் தொல்லை அதிகரிப்பு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!! என GPM மீடியாவில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments