முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்: புதுகை கலெக்டர் தகவல்!மாநில விளையாட்டு விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரை வழங்கி வருகிறது.

விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

இதுதவிர விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி 2020-2021-ம் ஆண்டிற்கான (காலம் 1.4.2017 முதல் 31.3.2020 வரை) முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (www.sdat.tn.gov.in) என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் ‘முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு முதன்மை செயலர், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஜவஹர்லால் நேரு விளையாட்டுரங்கம், பெரியமேடு, சென்னை- 600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments