புதுக்கோட்டையில் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக அம்புக்கோவில் கிராமம் தேர்வு – மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்!புதுக்கோட்டையில் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக அம்புக்கோவில் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், அம்புக்கோவில் கிராமம் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு நேற்று அம்புக்கோவில் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
 
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், அம்புக்கோவில் கிராமம் 2020-21ம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் அம்புக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவரை நேரில் வரவழைத்து அவரிடம் அம்புக்கோவில் கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் அம்புக்கோவில் கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது.

மேலும் மத நல்லிணக்கத்துடன் வாழும் அம்புக்கோவில் ஊராட்சி பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், ஆயிஷாராணி, அம்புக்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் கா.சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments