புதுக்கோட்டை மாவட்ட வக்பு வாரிய உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!!



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள உலமாக்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். 

உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 40 வயதிற்குள் ஆகும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்ட எல்.எல்.ஆர். சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி உடையவராக இருக்கலாம்.

விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, வயதுச் சான்று, சாதிச் சான்று, புகைப்படம் இணைக்கப்பட வேண்டும். ஓட்டுனர் உரிமம், எல்.எல்.ஆர். கல்வித் தகுதி சான்றிதழ், வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி இணைக்கப்பட வேண்டும். 

மாற்றுத் திறனாளியாக இருந்தால் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும். பயனாளிகள் இருசக்கர வாகனத்தை தங்கள் சொந்த நிதி ஆதாரத்தின் பெயரிலோ அல்லது வங்கிக் கடன் மூலமோ வாங்கலாம். பயனாளி முழுத்தொகையும் செலுத்தி இருசக்கர வாகனம் வாங்கியிருப்பின் இதர தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதற்கான மானியத் தொகை வழங்கப்படும். 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலமாக்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments