புதுக்கோட்டை மாவட்டத்தில் இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிபுதுகை மாவட்டத்தில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி நிகழ்ச்சிகள் இணையதளம் வாயிலாக (Webinar) முறையில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக எதிர்வரும் 12.07.2021 முதல் 16.07.2021 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15.07.2021 அன்று தேசிய திறன் நாள் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், முன்னுரிமை பிரிவினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், வேலைநாடும் இளைஞர்களுக்கு உயர்கல்வி, போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, திறன்பயிற்சி மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணைய வழியாக (Webinar) நடைபெற உள்ளது.

மேலும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் மூலமாக முன்கற்ற தொழில்நுட்பம் அறிந்தவர்களில் உரிய சான்றுகள் இல்லாதோரை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் வல்லுநர்களை கொண்டு ஆன்லைன் மூலமாக தினமும் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இந்நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளில் இணையம் வழியாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது deopdktjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments