பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடிழந்தவருக்கு சொந்த செலவில் வீடு கட்டித் தந்த அரசு மருத்துவர்: கிராம மக்கள் பாராட்டு 


தீ விபத்தில் வீடிழந்த தம்பதியினருக்கு அரசு மருத்துவர் ஒருவர், தனது சொந்தப் பணத்தில் வீடு கட்டிக் கொடுத்ததால், பொதுமக்கள் பலரும் மருத்துவரைப் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செங்கமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன்- கமலம் தம்பதியினர். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர்களது கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த நகை, பணம், பத்திரங்கள், படிப்புச் சான்றிதழ், பாத்திரங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இதற்கிடையில் பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சௌந்தர்ராஜன், அப்பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது தம்பதியினர், தீ விபத்தில் வீடிழந்த நிலையில் அங்குள்ள மரத்தடியிலும், இரவில் பள்ளிக்கட்டிடத்திலும், இரு வயதுக் குழந்தையோடு தஞ்சமடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தனது சொந்தப் பணத்தில் சுமார் ரூ.1 லட்சம் செலவில் தம்பதிக்கு குடிசை வீடு அமைத்துக் கொடுத்தார். மேலும், அந்த வீட்டுக்கு மின் இணைப்பும் பெற்றுத் தந்தார். அத்துடன், நேற்று (4-ம் தேதி) காலை அரிசி, பழம், காய்கறிகள், புத்தாடைகள், பீரோ, பாத்திரங்கள் ஆகியவற்றைத் தம்பதிக்குச் சீர்வரிசைப் பொருளாக வழங்கியதோடு, புதிய குடிசை வீட்டில் பால் காய்ச்சி கிரஹப்பிரவேசம் செய்திடவும் உதவி செய்தார்.

இதையடுத்து, பாலமுருகன் தம்பதியர் இன்று காலை, புதிய வீட்டில் பால் காய்ச்சிக் குடிபுகுந்தனர். தனது கிராமத்தைச் சேர்ந்த ஏழைத் தம்பதிக்கு உதவிய மருத்துவர் செளந்தரராஜனுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஈகை செல்வம் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் வீட்டைக் கட்டித் தந்த மருத்துவருக்கு பாலமுருகன் - கமலம் தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதேபோல் கடந்த ஆண்டு தீ விபத்தில் வீட்டை இழந்த தம்பதிக்கும் மருத்துவர் வி.சௌந்தர்ராஜன் வீடு கட்டித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் வி.சௌந்தர்ராஜன்
இதுகுறித்து, மருத்துவர் வி.சௌந்தர்ராஜன் கூறுகையில், ''அடிப்படையில் நானும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். குடிசை வீட்டில் பிறந்து வளர்ந்தவன். வீடிழந்தவருக்கு பேராவூரணி எம்எல்ஏ நிவாரண உதவி அளித்த விவரம் தெரியவந்தது. அரசு சார்பிலும் உதவி அளிக்கப்பட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட நபரால் தனது வீட்டைக் கட்ட நிதி போதாமல் தவிப்பது, இப்பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஒத்துழைப்புடன், தற்போது வீடு கட்டிக் கொடுத்து புதுவீடு புகும் நிகழ்ச்சி நடைபெற்றது'' என்று தெரிவித்தார்.

புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ஈகை செல்வம், துணைத் தலைவர் மேனகா சுப்பையன், வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஊரணி கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை நிர்வாகிகள் ஆனந்தராஜ், ஷாஜகான், செவிலியர்கள் லில்லி மேரி, புனிதா மற்றும் கிராமத்தினர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments