தொழில்நுட்ப கோளாறால் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி!!



தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இயற்கை பேரழிவுகளை விரைவாக கண்காணிப்பதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து இருந்தது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘ஈ.ஓ.எஸ்.- 03’ செயற்கைகோள் பொருத்தப்பட்ட 52 மீட்டர் உயரம் கொண்ட ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் 14 மணிநேர ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு, நேற்று காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தீப்பிழம்பை கக்கியபடி மேக மூட்டங்களை கிழித்து கொண்டு விண்ணை நோக்கி ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

இஸ்ரோ மிகவும் எதிர்பார்த்த இந்த ராக்கெட் மற்றும் செயற்கைகோள், பூமியில் இருந்து புறப்பட்ட 5 நிமிடம் 30 வினாடிகளில் 139 கி.மீ. உயரம் சென்றதும் ‘கிரையோஜெனிக் என்ஜினில்’ உள்ள எரிபொருள் எரியவில்லை.
இதனால் ராக்கெட்டின் பாதை திட்டமிட்ட இலக்கில் இருந்து விலகியதால் திட்டம் தோல்வியடைந்தது.

இஸ்ரோ தலைவர் கே.சிவன், விஞ்ஞானிகள் மத்தியில் பேசும்போது, ‘கிரையோஜெனிக் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை’ என்றார்.

தொடர்ந்து இஸ்ரோவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘‘முதல் மற்றும் 2-வது நிலைகளின் செயல்திறன் திட்டமிட்டப்படி நன்றாக இருந்தது. இருப்பினும், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ‘கிரையோஜெனிக்’ மேல்நிலை பற்றவைப்பு நடக்கவில்லை.
இதனால் திட்டமிட்டபடி பணியை நிறைவேற்ற முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இஸ்ரோவின் திட்டத்தின்படி, ‘கிரையோஜெனிக்’ எந்திரம் துல்லியமாக 4 நிமிடங்கள் 56 வினாடிகளில் இருந்து 18 நிமிடங்கள் மற்றும் 29 வினாடிகள் வரை செயல்பட வேண்டும். எந்திர செயல்திறனின் இந்த வரிசை வெற்றிகரமாக இருந்திருந்தால், ஈ.ஓ.எஸ்.03 செயற்கைகோள் பூமியில் இருந்து ஏவப்பட்ட 18 நிமிடங்கள் மற்றும் 39 வினாடிகளில் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அந்த செயல்முறை 5 நிமிடங்கள் 40 வினாடிகளில் ஒரு தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டது.

கொரோனா காரணமாக ராக்கெட் ஏவுவதில் கடந்த ஓராண்டுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. அதனடிப்படையில் நடப்பாண்டு ஏவப்படும் 2-வது ராக்கெட் இதுவாகும். தற்போது ஏவப்பட்ட ஈ.ஓ.எஸ். செயற்கைகோள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மற்றும் நடப்பு ஆண்டு கடந்த மார்ச் மாதம் 2 முறை ஏவ முயற்சிக்கப்பட்டு தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது 3-வது முறையாக ஏவப்பட்டு தோல்வியில் முடிந்துவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இந்த தோல்வி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 180 கி.மீ. செல்ல வேண்டும். ஆனால் 139-வது கி.மீ. தொலைவில் நின்றுவிட்டது. எனவே கடலில் விழுவதற்கு வாய்ப்பு குறைவு தான். இதுகுறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments