புதுக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்!புதுக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கி முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பி.ஏ., பி.எஸ்.சி. உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கணித பாடப்பிரிவில் நேற்று மாணவிகள் பங்கேற்றனர்.

கலந்தாய்வில் மாணவிகளின் சான்றிதழ்களை பேராசிரியைகள் குழுவினர் சரிபார்த்தனர். இதனை கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி பார்வையிட்டார். கலந்தாய்வு குறித்து அவர் கூறுகையில்,

``புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவிகள் மட்டும் படிக்க கூடிய ஒரே அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இது தான். இளங்கலையில் 13 பாடப்பிரிவுகளும், 10 முதுகலை பாடப்பிரிவுகளும், 5 ஆராய்ச்சி பாடப்பிரிவுகளும் உள்ளன. இளங்கலை முதலாமாண்டில் மொத்தம் 1,240 இடங்கள் உள்ளன. 

இதில் சேர மொத்தம் 5 ஆயிரத்து 1 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். வருகிற 3-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரி திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திவிட்டனர். மாணவிகளிடமும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளன'' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments