புதுக்கோட்டை வழியாக விருதுநகர், மானாமதுரை ரெயில்களை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை!புதுக்கோட்டை வழித்தடத்தில் மீண்டும் விருதுநகர் - திருச்சி மற்றும் மன்னார்குடி-மானாமதுரை ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. அதாவது பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை திறக்கவும், கல்லூரிகள் அனைத்தும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பாசஞ்சர் ரெயில்களை இயக்குவது தொடர்பாக அறிவிப்புகளை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் புதுக்கோட்டை வழித்தடத்தில் முக்கிய ரெயில்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள விருதுநகர்-காரைக்குடி-திருச்சி, மன்னார்குடி-திருச்சி-மானாமதுரை டெமு ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ``புதுக்கோட்டை வழித்தடத்தில் பகலில் ரெயிலில் பயணிக்க பெரிதும் உதவிய இந்த 2 ரெயில்களையும் தென்னக ெரயில்வே மீண்டும் இயக்கவேண்டும். மேலும் விருதுநகர்-காரைக்குடி-திருச்சி ரெயில் 217 கி.மீ. பயண தூரத்தை தொடர்ந்து 5 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை பயணமாகும். ஆனால் இந்த ரெயிலில் கழிவறை என்பதே இல்லை.

இந்த ரெயிலில் பயணிக்கும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதி அடைந்து வந்தனர். இந்த ரெயிலை மீண்டும் இயக்கும்போது கழிவறை வசதியுடன் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments