புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்: கலெக்டர் கவிதா ராமு அறிவுறுத்தல்பள்ளிகள் வருகிற 1-ந் தேதி திறக்கப்பட உள்ளதையொட்டி ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கலெக்டர் கவிதாராமு அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகளில் வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பள்ளிகள் வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் செயல்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பும் மற்றும் வகுப்புகள் முடிவுற்ற பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அனைவரும் தவறாமல் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்வதுடன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கைகழுவும் வகையில் சோப்புகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை வைக்க வேண்டும்.

பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவ, மாணவிகளையும் வெப்பமாணி கருவியின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அதன்பிறகே பள்ளிகளுக்குள் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன் (புதுக்கோட்டை), திராவிடச்செல்வம் (அறந்தாங்கி), சண்முகநாதன் (இலுப்பூர்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments