ஆக. 15-ல் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை: தமிழக அரசு உத்தரவு





கரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், ஜன. 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆக.15 சுதந்திர தினம், அக். 02 காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இக்கூட்டங்களில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை முன்வைப்பார்கள். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஓராண்டாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால், இந்தாண்டு சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக, கமல்ஹாசன் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், கரோனா காரணமாக வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பஞ்சாயத்து தலைவர்களுக்கு இது குறித்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பாதுகாப்பு விதிகளை காரணமாகச் சொல்லி, கிராம சபை கூட்டங்களை ரத்துச் செய்வது சரியல்ல. உரிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, கிராம சபை கூட்டங்களை நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments