`எங்கள் ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்திற்குள் இணைக்கக்கூடாது'- எதிர்க்கும் புதுக்கோட்டை மக்கள்


பெரும்பாலான பொதுமக்கள் புதுக்கோட்டைக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். எங்கள் கிராம மக்கள் யாருக்கும் சிவகங்கை மாவட்டத்திற்குள் கிராமத்தை இணைக்க விருப்பமில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் பாலக்குறிச்சி ஊராட்சி 6 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியானது. சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில்தான், பாலக்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்கும் உரிமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குள் வருகிறது. குற்றவியல் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டத்திற்குள்ளும் வருகிறது. ஆனாலும், தற்போது வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் எல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் தான் உள்ளது. இந்த நிலையில், வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட சிவகங்கை மாவட்ட தொடர்புகள் அனைத்தையும் நீக்கி, பாலக்குறிச்சி ஊராட்சியைப் புதுக்கோட்டை மாவட்டத்துடன் முழுமையாக இணைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில்,

" வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் துறை அலுவலகங்கள், சிவில் வழக்குகளுக்கான நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இருக்கிறது. எங்கள் ஊராட்சி பொன்னமராவதி ஒன்றியத்திற்குள் வருகிறது. எங்கள் ஊரிலிருந்து பொன்னமராவதி சென்று வர அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கிறது. ஆனாலும், கிராம மக்களின் கருத்துகளைக் கேட்காமல் எங்கள் ஊராட்சியை முழுவதுமாக சிவகங்கை மாவட்டத்துடன் இணைப்பதற்கான முயற்சியில், எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னம்மாள் பெரிய பொன்னன் உள்பட சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பாலக்குறிச்சி ஊராட்சியைச் சிவகங்கை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி உறுப்பினர்களின் விருப்பமின்றி வெற்று பேப்பரில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அந்த மனுவுடன் சிலரைக் கூட்டிச் சென்று பொன்னமராவதி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவரிடம் மனு கொடுத்துள்ளார். 1977-ல் சிவகங்கை மாவட்டத்துக்குள் மாற்றுகிற பிரச்சினையின்போது, பெரும்பாலான பொதுமக்கள் புதுக்கோட்டைக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். எங்கள் கிராம மக்கள் யாருக்கும் சிவகங்கை மாவட்டத்திற்குள் கிராமத்தை இணைக்க விருப்பமில்லை. சிவகங்கை மாவட்டத்திற்கு ஊராட்சி சென்றால், எங்கள் கிராம மக்களுக்குத் தேவையில்லாத வீண் அலைச்சல்தான் ஏற்படும்.
 
புதுக்கோட்டை கலெக்டரிடம் முறையிட்ட முதியவர் ஆதங்கம் மேலும், தற்போது எங்கள் ஊராட்சியில் மக்கள் வாக்களிக்கும் உரிமை திருப்பத்தூர் தொகுதிக்குள் இருக்கிறது. அதையும் மாற்றி திருமயம் தொகுதிக்குள் கொண்டு வர வேண்டும். இதுபற்றி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், முதலமைச்சர் வரையிலும் மனு கொடுத்திருக்கிறோம்" என்றனர்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னம்மாள் பெரியண்ணனிடம் கேட்டபோது, " பிரிச்சி, பிரிச்சி இல்லாம எல்லாமே,புதுக்கோட்டையோ அல்லது சிவகங்கை மாவட்டத்துக்குள்ளேயே ஏதாவது ஒன்றுக்குள் வர வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். கிராம மக்கள் பெரும்பான்மையானவங்க எங்கிட்ட சிவகங்கை மாவட்டத்துக்குள்ள சேர்க்கணும்னு சொன்னதால அந்த கோரிக்கையை மேலிடத்துக்கு கொண்டுபோனேன். அவ்வளவு தான். புதுக்கோட்டை, சிவகங்கைன்னு ரெண்டு கோஷ்டி செயல்படுறது தான் இப்போதைக்கு பிரச்னை. அரசுதான் இதில் உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments