புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய மரம் நண்பர்கள் இயக்கத்தினர்!!



புதுக்கோட்டை நகரில் தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மரம் வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை.

இதனை கண்டு வேதனை அடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த மரம் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் வெட்டப்படும் மரங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு தெற்கு 4-ம் வீதியில் உள்ள மருத்துவமனை அருகே வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

அதேபோன்று நேற்று தெற்கு 2-ம் வீதியில் வெட்டப்பட்ட மரங்களுக்கும் பால் ஊற்றி, மலர்மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். 

இதில், மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், செயலாளர் பழனியப்பா கண்ணன், இணைச் செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் மரங்களால் தான் மனிதர்களுக்கு இயற்கையான காற்று கிடைக்கிறது. சமீப காலமாக காற்று கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். செயற்கை காற்று மூலம் பலர் உயிர் பிழைத்தனர். ஆகவே, மரங்களை வெட்டக்கூடாது என்பது எங்களது உருக்கமான வேண்டுகோள். 

பனைமரத்திற்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என்பது போல மற்ற மரங்களுக்கும் அதே கட்டுப்பாடுகளை விதிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments