R.புதுப்பட்டிணத்தில் கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு: நண்பர்களுடன் படகு சவாரி சென்றபோது நிகழ்ந்த சோகம்!



மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் நண்பர்களுடன் படகு சவாரி சென்றபோது கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் நந்தலாலா (வயது 19). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்பளமோ என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதே கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஜெயசீலன் (19) என்பவரும் படித்து வருகிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால் நண்பர்கள் ஆனார்கள். இந்நிலையில் ஜெயசீலன் தேவகோட்டையை சேர்ந்த தனது நண்பர்களான அய்யப்பன் (19), பாலு (15), சஞ்சய்குமார் (20), ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆர்.புதுப்பட்டினத்தில் உள்ள நண்பர் நந்தலாலா வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் படகு சவாரி செய்ய விரும்பினர். அதன்படி ஜெயசீலன், நந்தலாலா, பாலு, சஞ்சய்குமார், ஐயப்பன் மற்றும் ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த நந்தலாலாவின் நண்பர்கள் நாகலிங்கம் (19), ஹரிஹரசுதன் (20), ஜோதிமணி (19) ஆகிய 8 பேரும் கணேசன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் படகு சவாரி சென்றனர். படகை அவர்களே இயக்கியதாக தெரிகிறது. இந்நிலையில் நாட்டுப்படகு ஒரு நாட்டிக்கல் தூர பகுதிக்கு சென்றவுடன் கடலில் குளிப்பதற்காக அய்யப்பன் என்பவர் கடலில் குதித்துள்ளார். கடல் பகுதியில் அதிக நீரோட்டம் இருந்ததால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அய்யப்பனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

அதன்பின் அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆர்.புதுப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அவர்களது ஆலோசனையின் பேரில் 10 நாட்டுப்படகில் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் கடலுக்குள் சென்று அய்யப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

கடலில் ஒரு நாட்டிக்கல் தூரத்தில் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், காணாமல் போன அய்யப்பனை அதிகாரிகள் உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் பிணமாக மீட்டனர்.

இதைத்தொடர்ந்து அய்யப்பனின் உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உடலை கடலோர காவல் குழுமத்தினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments