கொரோனா கால மாணவர் நலன் 1 - மொபைலில் மூழ்கும் பிள்ளைகளை மீட்பதன் அவசியம் என்ன?




கொரோனா பேரிடர் காலம் என்பது வெறும் நோய்த்தொற்று காலமாக மட்டும் இருந்துவிடவில்லை. பொருளாதார இழப்புகள், மனநல பிரச்னைகள், அதீத ஆன்லைன் பயன்பாடு, வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போதல் என பலவற்றின் தொகுப்பாகவே இருந்தது. அந்த வகையில் கொரோனா காலமென்பது பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு பெரும் இன்னல்களை கொடுத்துள்ளது. காரணம், பெரியவர்களுக்காவது உலகுடன் ஏதாவதொரு வகையில் தொடர்பு இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு வெளியுலகுடன் தொடர்பேயற்ற நிலை உருவானது. அதிகபட்சம் அண்டை வீட்டாருடன் மட்டுமே அவர்கள் உலகம் முடிந்துவிட்டது. அதைவிட்டால் மொபைல், கேட்ஜெட்ஸ் என ஆன்லைனாகிவிட்டார்கள். இந்த ஆன்லைன் கலாசாரமும், வெளியுலகுடன் தொடர்பற்ற நிலையும் குழந்தைகளின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, இது அவர்களின் எதிர்காலத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும், அவற்றை எப்படி சமாளிப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு எளிதான பதில் சொல்லும் தொகுப்பாக இந்தத் தொடர் இருக்கும்.


முதல் அத்தியாயத்தில், கொரோனா காலத்தில் மனநலம் சார்ந்த என்ன மாதிரியான பிரச்னைகளை குழந்தைகள் எதிர்கொண்டார்கள், இனியும் எதிர்கொள்வார்கள், அதன் பின்னணியில் மொபைல் ஃபோன் எந்தளவுக்கு உள்ளது, 'ஆரோக்கியமான மனநலன்' என்பது குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் பார்ப்போம். குழந்தைகளுக்கான மனநல மருத்துவரான பூங்கொடி பாலா இதுபற்றி நம்மிடையே விரிவாகப் பேசினார்.


"குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல்நலன் எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட கூடுதல் முக்கியமானது ஆரோக்கியமான மனநலன். ஏனெனில், இந்த வயதில் அவர்களுக்கு மனநலன் நன்றாக இருந்தால்தான் அவர்களால் எதிர்காலத்தில் சமூகத்துடன் இணைந்து வாழும்போது சிக்கலற்ற வாழ்வை எதிர்கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் சிறு வயதில் வீட்டில் இருப்போரிடம், பள்ளிக்கூடத்தில் இருப்போரிடம், பக்கத்து வீட்டில் இருப்போருடன் மகிழ்ச்சியான மனநிலையில் நாட்களை கழிக்கும் குழந்தைகள், வருங்காலத்தில் நேர்மறையான வாழ்வை வாழ்வதாக யுனிசெஃப் அமைப்பே கூறியுள்ளது.

இதுவே சிறுவயதில் ஏதேனும் மோசமான சூழலிலிருந்து மீளாமல், மன அழுத்தத்துக்கு உள்ளாகி பெரியவர்களாகும் குழந்தைகள், வளர்ந்த பிறகு கற்றல், ஒழுக்கம், எமோஷனல் ஹேண்ட்லிங் ஆகிய விஷயங்களில் பின்தங்கியே இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கொரோனா கால முடக்கத்தில் குழந்தைகளின் ஆரோக்கியமான மனநலன் என்பது, மொபைலிலிருந்து அவர்களை விடுவிப்பதிலிருந்தே தொடங்குகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொதுமுடக்க காலத்தில், குழந்தைகளின் ஒரே நண்பனாக மொபைல் ஃபோன்கள் மாறிவிட்டன. மொபைல் ஃபோன் என்பது, கிட்டத்தட்ட ஒருவகை போதைதான். இதை குறிப்பிடக் காரணம், இதில் அந்தளவுக்கு ஒருவரை அடிமையாக்கும் ஆபத்து நிறைந்துள்ளது. தனக்கான போதைப்பொருள் கிடைக்காதபோது, எப்படி ஒரு நபர் ஆத்திரத்துடனும் கோபத்துடனும் எதிரிலிருப்போரை அணுகுவார்களோ அப்படித்தான் குழந்தைகளும் பெற்றோரை அணுகுவர்.


 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments