அரிய வகை ரத்தத்தைப் பெற்று கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை: புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனை சாதனை




புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அரிய வகை ரத்தத்தைப் பெற்று கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம் பாரப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அமுதா (26). இவர், 2-வது பிரசவத்துக்காக, கடந்த 12-ம் தேதி ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



இவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், மிகவும் அரிதான ரத்த வகையான பாம்பே வகை இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இவருடைய உமிழ் நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், பாம்பே குரூப் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாம்பே ரத்த வகையானது பல ஆயிரம் பேரில் ஒருவருக்குக் காணப்படும் அரிய வகையாகும். இந்த அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு அதே வகை ரத்தம் மட்டுமே செலுத்த முடியும். மேலும், இவருக்கு ரத்த சோகை அதிகம் இருந்ததால் ரத்தம் செலுத்த வேண்டியிருந்து.

மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கூடுதல் முயற்சி செய்து அதே ரத்தத்தை வரவழைத்தனர். அமுதாவுக்கு அந்த ரத்தம் செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறியதாவது:

"இந்த அரிய வகை ரத்தம் கொண்ட ரத்த தானம் செய்பவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, நோய் குறியியல் துறை இணை பேராசிரியர் உஷா மற்றும் ரத்த வங்கி அலுவலர் கிஷோர் குமார் ஆகியோரின் முயற்சியில் இந்த அரிய வகை ரத்தம் மதுரையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணியின் ஒருங்கிணைப்போடு சிறப்பு வாகன வசதியுடன் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையிலும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் தலா ஒரு யூனிட் ரத்தம் பெறப்பட்டு 15-ம் தேதி செலுத்தப்பட்டது. பின்னர், அன்றைய தினமே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்".

இவ்வாறு பூவதி தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments