குடிநீர் வினியோகம், துப்புரவு பணிகளுக்காக தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.800 கோடி விடுவித்த ஒன்றிய அரசு!ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகம், துப்புரவு பணி, மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் மறுசுழற்சி, திறந்தவெளியில் காலைக்கடன்களை கழிக்கும் நிலையை போக்குதல் போன்ற பணிகளுக்காக ஒன்றிய அரசு ஆண்டுதோறும் மானிய உதவித்தொகை வழங்கி வருகிறது.

ஒன்றிய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் குடிநீர், துப்புரவு திட்டங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிக்கு மேல் கூடுதலாக ஒன்றிய அரசு வழங்குவதுதான் இந்த மானிய உதவித்தொகை ஆகும். 

இந்தநிலையில், நடப்பு நிதியாண்டுக்காக, 25 மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.13 ஆயிரத்து 385 கோடியே 70 லட்சம் மானிய உதவித்தொகையை விடுவித்துள்ளது. 

15-வது நிதி கமிஷன் சிபாரிசுப்படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நிதி, மேற்கண்ட மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், துப்புரவு பணிகளை மேற்கொள்ள உதவும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ரூ.800 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 783 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, முதலில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து பெற்ற 10 பணி நாட்களுக்குள், அவற்றை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால், நிதியுதவியை வட்டியுடன் அளிக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.25 ஆயிரத்து 130 கோடி மானிய உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments