லஞ்ச அதிகாரிகள் குறித்து தகவல் தருவோருக்கு பரிசு






சென்னை-'லஞ்ச வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பரிசு வழங்கப்படும்; அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்' என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடு, அலுவலகம், நட்சத்திர ஓட்டல்கள் என, பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல, முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கைத்தடிகளின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கட்டு கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் சிக்கின. வீரமணி வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்த, 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் மற்றும் வீடு என, பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், அவரது வீட்டிலிருந்து 13 லட்சம் ரூபாய், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விரைவில், ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், அரசு அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபடுவது பற்றி போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, 38 மாவட்டங்களிலும் ஓரிரு நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகம் என, பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், அதிகாரிகளின் மேஜை, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதுக்கி இருந்த லஞ்சப் பணம், 31 லட்சம் ரூபாய் சிக்கியது.அதனால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து, 044 - 2231 0989 என்ற எண்ணில் பொது மக்கள் தகவல் தரலாம்; அவர்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும். தகவல் தருவோருக்கு பரிசும் வழங்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments