நவ.1ஆம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!



தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் வருகிற 1-ந்தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதாக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று ஊரடங்கில் தளர்வுகள் குறித்த அறிவிப்பில் அரசு தெரிவித்து இருந்தது. 

அந்தவகையில் வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு தொடங்கி 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. 

அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்களும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் அதே நாளில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளும் திறக்கப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் சமீபத்தில் கேள்வியெழுப்பியபோது, மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்று கூறியதோடு, அதுபற்றிய தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் நிறைவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அவற்றை அரசாணை மூலமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெளியிடப்பட்ட அரசாணையில், மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு வருகிற 1-ந்தேதி இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டு இருந்த அந்த அரசாணையில், ‘‘மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தொடர்பான முடிவு பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

இதன்படி, ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின் அடிப்படையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளன. மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அரசு முடிவு எடுத்து அறிவிக்கும் என்று தெரிகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments