நியாயவிலை கடைகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு






மூன்று தினங்கள் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் 6ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. 

வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புத்தாடைகள் வாங்கியும் பட்டாசுகள் ஆர்டர் கொடுத்தும் மக்கள் மகிழ்ந்து வருகின்றனர்

இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ரேஷன் கடைகள் கூடுதல் நேரம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து வைத்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும், எடையாளர்கள் பற்றாக்குறை இருந்தால் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட தன்னார்வலர்களை நியமித்து, பொதுவிநியோக திட்ட பணிகள் துரிதமாகவும் சீராகவும் நடைபெற வழிவகை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

தீபாவளிக்கு முன்பு ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படுவதால், 6ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஏழாம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் நியாயவிலை கடைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments