இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்புஇலங்கை கடற்படையால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட மீனவரின் உடல் கோட்டைப்பட்டினம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேரும் ஒரு படகில் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.
இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா (25), தாய் ஆரவள்ளி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மீனவரின் சடலமானது அலுவலர்கள் கூறியபடி நேற்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த மீனவர்கள் நேற்று கடலில் இறங்கிப் போராட முயன்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். அதன் பிறகு, கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 2 அலுவலர்கள், 9 மீனவர்கள் என 11 பேர் கொண்ட குழு மீனவர்களுக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் இன்று (அக். 23) அதிகாலை சுமார் 5 மணிக்கு சர்வதேச எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதையடுத்து, இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. அந்த உடலைப் பெற்றுக்கொண்டு இங்கிருந்து சென்ற 11 பேர் கொண்ட குழு, கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்துக்கு ராஜ்கிரண் உடலைக் கொண்டு வந்தது.
ராஜ்கிரண் உடலைக் கண்ட குடும்பத்தினர், உறவினர்கள், சக மீனவர்கள் கதறி அழுததால் மீன்பிடித் தளமானது மரண ஓலமாகக் காட்சி அளித்தது. பின்னர், மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ராஜ்கிரண் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராஜ்கிரண் உடல் நூற்றுக்கணக்கான மீனவர்களின் இறுதி ஊர்வலத்தோடு கோட்டைப்பட்டினம் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments