கப்பலால் மோதி படகை மூழ்கடித்ததில் தமிழக மீனவர் பலி- இலங்கை கடற்படையினர் அட்டூழியம் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்.








படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்கிரண் (30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 பேரும் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 3 பேரும், மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், ராஜ்கிரண் உள்ளிட்ட 3 பேர் சென்ற விசைப்படகு மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் விசைப்படகு சேதமடைந்ததால், தண்ணீர் படகிற்குள் புகுந்தது. இதனால் சிறிது நேரத்தில் படகு கடலுக்குள் மூழ்கி விட்டது. இதையடுத்து அந்த படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து இலங்கை கடற்படையினர், தண்ணீரில் தத்தளித்த சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய இருவரையும் மீட்டு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர். ஆனால் கடலில் தத்தளித்த ராஜ்கிரண் மட்டும் மாயமானார்.

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாங்கள் மீட்ட 2 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து இலங்கை அரசு, இந்திய அரசுக்கு தகவல் கொடுத்தது. இதுபற்றி தெரியவந்ததையடுத்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் மீனவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் காணாமல் போன மீனவரின் கதி என்ன? என்று தெரியாமல் மீனவர்கள் திகைத்து போய் நின்றனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காணாமல் போன மீனவரை தேடுவதற்காக கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில் காணாமல் போன ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும், அவரின் உடலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அங்கு கொண்டு சென்றதாகவும் மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது இலங்கை அரசுக்கும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இலங்கை கடற்படையினர் அழைத்துச்சென்ற 2 மீனவர்கள் மற்றும் கடலில் மூழ்கி இறந்த மீனவர் உடலையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் விசைப்படகை மூழ்கடித்ததில் இறந்த மீனவர் ராஜ்கிரணுக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் தான் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கி இறந்த ராஜ்கிரண் வீட்டிற்கு அமைச்சர் மெய்யநாதன் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட 2 மீனவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து தலா ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் 2 மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடல் தாயகம் வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என மீனவ சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments