2022-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!! சென்னையிலிருந்து விமானம் கிடையாது!!!2022-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

இது மட்டுமல்லாமல் ஹஜ் செயலிகள் மூலமும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக புனித ஹஜ் பயணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அதில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியா செல்ல விரும்புபவர்கள், வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஹஜ் பயணிகளுக்கு தேவையான தொழுகை விரிப்புகள், இஹ்ராம் ஆடைகள், குடை, துண்டு உள்ளிட்ட பொருட்களை உள்நாட்டிலேயே உள்நாட்டுப் பணத்தில் வாங்க அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் சவுதி அரேபியாவை ஒப்பிடும் போது 50% விலை குறைவாக இந்தியாவில் அந்த பொருட்கள் கிடைக்கக் கூடும் எனவும் அமைச்சர் முக்தர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணித்திற்கு இந்தியாவிலிருந்து 2 லட்சம் பேரை மத்திய அரசு அனுப்பி வைத்து வருவதாகவும் 2022-ம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புவோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் நாடு முழுவதும் இதுவரை 21 இடங்களிலிருந்து ஹஜ் புனித பயணம் புறப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அதை 10 என்ற எண்ணிக்கையில் குறைத்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ரீநகர், டெல்லி, மும்பை, லக்னோ, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், கவுகாத்தி, ஆகிய 10 ஊர்களில் இருந்து மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் இருந்து 2022-ம் ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழகத்திலிருந்து ஹஜ் செல்வோர், அருகாமை மாநிலங்களான கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்தோ அல்லது கேரளாவின் கொச்சின் விமான நிலையத்தில் இருந்தோ தான் புறப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

ஆண்கள் துணையின்றி ஹஜ் செய்ய விரும்பி கடந்த 2 ஆண்டுகளில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த விண்ணப்பங்கள் 2022-ம் ஆண்டு பரிசீலிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments