வீட்டுமனைகளை வரன்முறை செய்ய - ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது:



க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் க.பரமத்தி அருகே கொங்கு நகரில் நிலம் வாங்கி உள்ளார். தனது வீட்டுமனையை வரைமுறை செய்வதற்காக க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) குமரவேல் (46) என்பவரிடம் அணுகியுள்ளார். அப்போது அனுமதி வழங்க வேண்டுமெனில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என குமரவேல் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத சக்திவேல் இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனைதொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை சக்திவேலுவிடம் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சால்வன்துரை கொடுத்து குமரவேலிடம் கொடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சக்திவேல் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் சால்வன் துரை, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலை கைது செய்து வேனில் கொண்டு சென்றனர்.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ேசாதனை நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments