புதுக்கோட்டை உள்பட தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கொள்ளை கும்பல் கைது! 74 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பறிமுதல்!!தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 74 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மேலவஸ்தாசாவடி ரவுண்டானா அருகே தனிப்படை போலீசார், சந்தேகத்தின் பேரில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் ஓமலூரை சேர்ந்த பால்ஜேக்கப் மகன் மனோஜ்(வயது 35), சிவகங்கை மாவட்டம் கீழடியை சேர்ந்த கண்ணன் மகன்கள் கார்த்திக்ராஜா(24), ராஜாராமன்(26), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சூரியா நகரை சேர்ந்த விருமாண்டி மகன் திலீப் திவாகர் (24) என்பது தெரிய வந்தது.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிடிபட்ட 4 பேரும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் 4 பேரிடமும் சோதனை செய்தபோது அவர்களிடம் 74 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், 2 இரும்பு ராடுகள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. அவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் பிடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் ஒரு வீட்டில் 15 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது.
மேலும் இந்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும் இந்த கும்பல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், கோவை, திருச்சி, காட்பாடி, வேலூர், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை கந்தர்வக்கோட்டை பகுதியில் கொள்ளையடித்தது என்பதால் அந்த பகுதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பகுதியில் 17 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது என்பதால் அந்த மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் பல்வேறு பகுதியில் கொள்ளையடித்த நகைகளை மதுரை மற்றும் திருச்சி பகுதியில் அடகு வைத்திருப்பதும், விற்றதும் தெரிய வந்துள்ளது. தஞ்சை வல்லம் பகுதியில் இவர்கள் கொள்ளையடிக்க வந்தபோதுதான் இவர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

அதன்படி இந்த கும்பல் கொள்ளையடித்த இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments