மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரமாக உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு!!



தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து ரூபாய் 6 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகையாக மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். 

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டில் இருந்து மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகையை குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தில் 6 ஆயிரம் மீனவ குடும்பங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 

அதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.108 கோடி மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகையாக வழங்கப்படும். 

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகையாக மொத்தம் ரூ.74.40 கோடி, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 

கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின்கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.09 லட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்குத்தொகை ரூ.1,500 உடன் அரசு நிவாரணத்தொகை ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,500 வீதம் நிவாரணத்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments